Sunday, December 15, 2013


மக்கள் தீர்ப்பே மகேஸ்வரன் தீர்ப்பு' என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதேபோல், "மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவை' என இன்னொரு பழமொழியும் உண்டு. இந்த இரண்டு பழமொழிகளும் மக்களை கடவுளின் நிலைக்கு உயர்த்திப் பார்க்கின்றன. சைவ மதத்தைப் பொறுத்தவரையில் அவர்களின் முழுமுதல் கடவுள் சிவபெருமான். அந்த சிவபெருமானைத்தான் மகேஸ்வரன் என்று அழைப்பர். அதாவது, தங்கள் முழுமுதல் கடவுளுடன் மக்களை ஒப்பிடும் ஓர் உயர்ந்த கலாசாரத்தை தமிழ் மக்கள் கொண்டுள்ளனர். இரத்த ஆறு தமிழ் மண்ணில் கரைபுரண்டு ஓடிய பின்பும் மக்களின் மனம் அதில் அடியுண்டுபோக மறுத்துவிட்டது. இதுதான் வட மாகாண சபைத் தேர்தல் முடிவு உலகிற்குச் சொல்லும் செய்தி. தமிழ் மக்களின் பிறப்புரிமையை ஏற்றுக்கொண்டு அத்தகைய உரிமைகளால் வென்றெடுக்கப்படவேண்டிய அவர்களின் இதயங்கள் பீரங்கிகளினாலும், வெடிகுண்டுகளினாலும் விமானக் குண்டுகளினாலும் துப்பாக்கிச் சன்னங்களினாலும் ஆழமான வடுவுக்கும் காலத்தால் ஆறாத புண்ணுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன. அந்த இரத்தம் தோய்ந்த வடுவையும் ஆறா புண்ணையும் மக்கள் வாக்குச்சீட்டின் மூலம் தீர்ப்பாய் அளித்துள்ளனர். பீரங்கி குண்டுகளுக்கு முன்னால் பணிய மறுத்த அவர்களின் இதயத்தின் பெருமை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்படும்.  அமைதியும் சமாதானமும் வளர்ச்சியும் பொருந்திய ஓர் ஒன்றுபட்ட இலங்கையை உருவாக்குவதற்கான முயற்சியில் முழுமுதல் முன்னோடிகளாய் தமிழ்த் தலைவர்கள் திகழ்ந்தனர். முழு இலங்கைக்கும் விடுதலை வேண்டுமென்று கூறி முதல் முறையாக ஒரு தேசிய விடுதலை இயக்கத்தை சேர் பொன்னம்பலம் அருணாசலம் 1919 ஆம் ஆண்டு ஆரம்பித்து அதற்கான முதலாவது தலைவராகவும் செயற்பட்டார். கொழும்பை தலைநகராகக் கொண்ட ஒரு நவீன  பல்லின சமூகத்தை உருவாக்கும் பாதையில் கொழும்பு மேற்கில் ஒரு தமிழ்த் தொகுதியை உருவாக்க வேண்டுமென்ற அவரது கோரிக்கையை முதலில் நியாயபூர்வமாக ஏற்றுக்கொண்ட ஜேம்ஸ் பீரிஸ் போன்ற சிங்களத் தலைவர்கள் பின்பு அதனை மறுத்தபோது அருணாசலம் மனமுடைந்து பின்வாங்கினார். பல்லின சமூகத்தை கட்டியெழுப்பும் பாதையில் பல அங்கத்தவர் தொகுதி இந்த அடிப்படையில் உருவாக்கப்படுவது இயல்பு. ஆனால், பல்லினத் தன்மை பொருந்திய இந்த யதார்த்தத்தை சிங்களத் தலைவர்களோ முற்றிலும் இனவாத கண்கொண்டு நிராகரித்துள்ளனர். அந்த மன அமைப்புத்தான் முள்ளிவாக்ய்கால் வரையான எங்களுடைய இன அழிப்பின் நீட்சியாகும். தலைவனை, அரசியல் மேதையை அல்லது தலைவர்களை இலங்கையின் அரசியல் வரலாறு இன்னும் கருத்தரிக்கவில்லை. 

இலங்கையில் ஆட்சிபீடமேறிய அனைத்து தலைவர்களும் சிங்கள இனத்தவர்களுக்கான தலைவர்களாக இருந்துள்ளார்களே தவிர, பல்லினங்களையும் அரவணைத்த, பல்லின மக்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட, ஒரு நவீன தேசத்தை உருவாக்குவதற்கான தலைவர்களாக இருக்கவில்லை. ஜனநாயகத்தைப் பற்றி அதிகம் பேசுவோர் வட மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பெரிதும் கண்டுகொள்வதாய் இல்லை. அவர்கள் ஜனநாயக முறையில் தமது தேசிய தனித்துவத்திற்கான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். தமிழ் மக்களுக்கு என்ன வேண்டுமென்பதை சிங்கள மக்களின் வாக்குகளால் நிர்ணயிப்பது ஜனநாயகமாகாது. தமிழ் மக்களின் விருப்பங்களை தமிழ் மக்களின் வாக்குகளால் நிர்ணயிப்பதுதான் ஜனநாயகம்! யாரும் எழுமாத்திரமாய் நினைப்பதுபோல் இராணுவ வெற்றிகளோடு தமிழ் மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டுவிடுமென்றால் அது தவறு. சிங்கள பண்பாடு, சிங்கள நுண்கலை, கட்டிடக்கலை, சிற்பக்கலை போன்ற சிங்கள கலை, கலாசார வளர்ச்சிக்கெல்லாம் தமிழ்ச் சமூகம் மிகப்பெரும் பங்காற்றியுள்ளது. நவீன வரலாற்றின் சிங்கள ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை என்பனவற்றை நவீன உலகிற்கு பெரிதும் அறிமுகப்படுத்தியவராக கலாயோகி ஆனந்த குமாரசுவாமி விளங்கினார். நவீன இலங்கையின் நிர்வாக கட்டமைப்பை வளர்த்ததிலும்  நவீன இலங்கையின் வளர்ச்சியிலும் தமிழரின் மூளைக்கும் உழைப்பிற்கும் மிகப்பெரிய பங்குண்டு. இலங்கையின் தேசிய வருமானத்தை முதுகெலும்பாய் தூக்கி நிறுத்தியவர்கள் மலையக தமிழ் மக்கள். தமிழ் மக்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இலங்கையின் வளர்ச்சிக்கு பெரிதும் ஊன்றுகோலாய் அமைந்தன என்பதை சிங்கள மக்களும் சிங்கள தலைவர்களும் புரிந்துகொள்வதாய் இல்லை. மாறாக, தமிழ் மக்களை படுகொலை செய்வதன் மூலம் அவர்கள் சாதிப்பது இலங்கைத் தீவுக்கு அபகீர்த்தியை தேடுவதைத் தவிர வேறொன்றுமில்லை. சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீகுவான்யூ இது தொடர்பாக ஆழமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 

ஈழத்தமிழரின் உழைப்பும் மூளையும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற தேசங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. அப்படிப்பட்ட ஈழத் தழிழரை அரவணைத்து ஒரு வளம் பொருந்திய நவீன இலங்கையை கட்டியெழுப்ப சிங்களத் தலைவர்கள் தவறிவிட்டனர்.   அது பண்பாட்டு வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான போராட்டமாகும். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை தொன்மையும் வரலாற்றுப் புகழும் மிக்க அவர்களது செம்மொழியும் அவர்களுக்கு புனிதமானதும் மேன்மையானதுமாகும். குடும்பப் பற்று மிக்க அவர்களது தனித்துவமான வாழ்க்கை முறையும் அவர்களுக்கு உன்னதமானவையாகும். ஆதலால் அவர்கள் தனது மொழி, பண்பாட்டு வாழ்க்கை முறையையும் ஒருபோதும் பிரித்துப் பார்க்க மாட்டார்கள். அரச போஷிப்பற்ற, புறக்கணிக்கப்பட்ட கூடவே ஒடுக்குமுறைக்குள்ளான மண்ணில் வாழும் மக்கள் தனது சுயமுயற்சியினால் முன்னேறிக் காட்டிய வரலாற்றைக் கொண்டவர்கள். எமக்கென்று ஓர் அரசு இருந்திருந்தால், கடந்த 50 ஆண்டுகளில் நாம் ஜப்பானுக்கு நிகரான பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சியை இந்தப் பூமியில் நிரூபித்துக் காட்டியிருப்போம். எமது வளர்ச்சி தடைப்பட்டிருப்பதற்கு இன ஒடுக்குமுறை முழுமுதல் காரணமாகும். இன ஒடுக்குமுறையிலிருந்து நாம் விடுதலை பெறுவதன் மூலம்தான் நாம் வளர்ச்சியடைய முடியும். நாம் போராடுவது சிங்கள மக்களுக்கு எதிராக அல்ல. மாறாக, எமது வளர்ச்சிக்குத் தடையான இன ஒடுக்குமுறையை அகற்றுவதற்காகத்தான். எங்கள் பிள்ளைகள் வீடற்றவர்களாய், நாடற்றவர்களாய் புவிப்பரப்பின் நாலாபுறங்களில் சதாழைகள் போல எங்கும் அடியுண்டு அலைகிறார்கள். கடல் பரப்பில் காவுகொள்ளப்படுகிறார்கள். வாழ்வை இழந்து, நம்பிக்கைகளை இழந்து நடைப் பிணங்களாய் அலைகிறார்கள். இதற்கெல்லாம் ஓரினத் தன்மை கொண்ட இலங்கை அரசின் ஒடுக்குமுறையே காரணமும் பொறுப்புமாகும். 

தமது பிள்ளைகளும்  பிள்ளைகளின் பிள்ளைகளும் தன்மானத்துடனும் தலைநிமிர்ந்தும் வாழ நாம் வழிசெய்ய வேண்டிய பொறுப்புள்ளவர்களாவோம். எங்கு ஒடுக்குமுறை இருக்கிறதோ அங்கு மக்கள் அதிலிருந்து விடுபடப் போராடுவார்கள். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத் தீவில் இன ஒடுக்குமுறை இறுதி வெற்றிபெற முடியாது என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியம். ஈழத்தமிழர் வாழும் பகுதி தரைவழியால் பூட்டப்பட்ட ஒரு டூச்ணஞீடூணிஞிடுஞுஞீ அல்ல. அதன் கேந்திர முக்கியத்துவம் அதற்கு இளமை குன்றாத கவர்ச்சியை என்றும் கொடுக்கின்றது. ஆதலால் ஒடுக்குமுறையை சாத்தியப்படுத்திவிடலாம் என்று எண்ணுவது தவறு. நேற்று குண்டுகளால் வீழ்த்தப்பட்டோம்.  ஆனால், இன்று வாக்குகளால் எழுந்து நிற்கிறோம். வாக்குகள் எமது நீதியை, நியாயத்தை வெளி உலகுக்கு பறைசாற்றுகின்றது. இன ஒடுக்குமுறை தோல்வியடையும் யுகம் இது. தமிழ் மக்கள் தமது அடிமன அபிலாசைகளை வாக்குகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எமது தலையில் பெரும் பொறுப்பை சுமத்தியிருக்கிறார்கள். அரசாங்கத் தரப்பினர் வளர்ச்சிக்காக தமக்கு வாக்களிக்குமாறு தமது அனைத்து அரச வளங்களையும் திரட்டி, பிரசாரம் செய்தபோதிலும் அனைத்து வளங்களையும் பயன்படுத்தியபோதிலும் மக்கள் கௌரவமும் தனித்துவமும் நிறைந்த வாழ்வுடன் கூடிய தமது கையிலான வளர்ச்சியை வேண்டியே வாக்களித்திருக்கிறார்கள். இந்த அபிலாசையை ஏற்றுக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு நீதிமான்களின் பொறுப்பாகும். 

இந்த அபிலாசைகளை யார் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் டுக்குமுறையாளர்களே ஆவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயுதங்களுடன் வந்து உரிமை கோரவில்லை. மாறாக, மக்களின் ஆணையுடன் வந்து உரிமை கோருகிறோம். அதுவும் அரசால் நடத்தப்பட்ட தேர்தலில் மக்கள் அளித்த வாக்கைக் கொண்டு வந்திருக்கிறோம் என்பதை அனைவரும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். எங்கள் மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்குப் பாத்திரமாக நாங்கள் நடந்துகொள்ள வேண்டியது எங்களது பொறுப்பாகும். மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டு எங்களுடன் தீர்வைக் காணவேண்டியது அரசின் கடமையாகும். எமக்கான பொறுப்பிலிருந்து நாம் விலகினால் வரலாறு எம்மைத் தூற்றும். அரசு எம்முடன் தீர்வு காணவேண்டிய கடப்பாட்டிலிருந்து தவறினால் இலங்கைத் தீவு வல்லரசுகளின் களமாகும். இலங்கை அரசைப் பொறுத்தவரையில் அது தமிழர்களின் உரிமைகளை ஒடுக்குவதற்காக பெரு வல்லரசுகளின் கால்களில் விழுகிறது. தனது சொந்த மக்களை ஒடுக்குவதற்காக அந்நியர்களின் கால்களில் வீழ்பவன் ஒரு நாள் அந்தக் கால்களாலேயே மிதிபடுபவனாக மாறுவான். எது எப்படி நடப்பினும், எப்படித்தான் வெளி அரசுகளின் உதவி பெற்று ஒடுக்குமுறையை அதிகரித்தாலும் அத்தகைய ஒடுக்குமுறைகளின் விளைவு தமிழரையும்  சிங்களவரையும் இருவேறு பாலங்களாகப் பிளக்கவே உதவும். ஆதலால் எல்லாவற்றுக்கும் தாயான நீதியிலிருந்து பிரச்சினைகளை அணுக ஆரம்பிக்கவேண்டும். மீண்டும் சொல்லக்கூடியது இதுதான். அனைத்து வகையான வளர்ச்சிக்கும் சமாதானத்துக்குமான தாய் நீதிதான். இப்போது அரச கட்டிலில் இருக்கும் தலைவர்கள் நீதியின் பெயரால் பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்கள். அதேவேளை இந்த உலகில் தனி ஒரு தேசமோ அரசோ தனித்து வாழ முடியாது. 

ஒரு அரசு என்பது  ஒரு தேசம் என்பது உலகளாவிய போக்கிலிருந்து பிரிக்க முடியாத பகுதி. அதனால் எமக்கான நீதி, நியாயம் இந்த உலகப் பரப்புக்கு விரியக்கூடியது. இந்தப் பூமிப் பந்தில் நாம் தனித்து விடப்படமாட்டோம். எனவே, உலகளாவிய நீதியின் ஒரு பகுதியாக எமது மக்களும் எமது போராட்டமும் இருக்கும். சிறுபிள்ளைகளின் விளையாட்டுச் சமையல் போன்றதுதான் இந்த மாகாண சபை அமைப்பாகும்.  சிறுபிள்ளைகள் பார்வைக்கு சமைக்கலாம் ,  பாவனையில் சாப்பிடலாம். ஆனால், அது சமையலாகவோ சாப்பாடாகவோ ஆகமுடியாது என்பது எப்படி உண்மையோ அப்படியே அதிகாரமற்ற இந்த மாகாண சபை அமைப்பாகும். ஆகவே, இந்த மாகாண சபையோடு மட்டும் நின்றுவிடாது, நாங்கள் அதனூடாகத்தான் எங்களுடைய தீர்வு முற்றுப்பெற்றதாகக் கருதாது, தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இலங்கை அரசு ஒரு முழுமையான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும். இன்று வடக்கு, கிழக்குப் பகுதி எங்கும் அரச நிர்வாகத்துறையில் சிங்கள உத்தியோகத்தர்களை நியமித்திருக்கின்றார்கள். குறிப்பாக அரச அதிபர்கள், கணக்காளர்கள் போன்ற உயர் பதவிகளுக்கு அவர்களை நியமிப்பதினூடாக தமிழர்களுடைய நிலங்களில் அவர்களுடைய நிர்வாக இயந்திரங்கள் முடக்கப்படுகின்றன. தமிழர்கள் வாழும் பிரதேசங்களிலே அவர்களுடைய கோவில்கள் உடைக்கப்படுகின்றன. பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் 150 க்கும் மேற்பட்ட பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன. கொடிகாமம்  வரணியிலே இருக்கின்ற 300 ஆண்டுகள் பிரசித்திபெற்ற கண்ணகி அம்மன் ஆலயத்தினுடைய சிலை களவாடப்பட்டிருக்கின்றது.    

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட பல ஆலயங்களுடைய சிலைகள் திருடப்பட்டிருக்கின்றன. ஆகவே, ஆலயங்களை இடிப்பது மற்றும் ஆலயச் சூழல்களிலே இருக்கின்ற வணக்க முறைகளை சிதைப்பதன் மூலம் தமிழர்களுடைய உன்னதமான வணக்க முறைகளுக்குக் களங்கம் ஏற்படுத்தப்படுகின்றது.   இதனைவிடப் பல இடங்களில் எங்களுடைய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. வலிகாமம் வடக்கில் தமிழர்கள் பார்த்துக் கொண்டிருக்க அவர்களுடைய சொந்த நிலங்கள் மற்றும் சொந்த வீடுகள் இடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. அவர்கள் அந்த இடங்களிலே சென்று குடியேறவிடாமல் தடுக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்று 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சொந்த இடங்களுக்குப் போக முடியாமல் அவர்கள் ஓர் உண்ணாவிரதம் நடத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இதனைவிட வடமராட்சி கிழக்கிலே, மண்டைதீவினுடைய பகுதியிலே, கிளிநொச்சியில், முல்லைத்தீவில், சம்பூரில் தமிழ் மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து ண்டிருக்கின்றார்கள். ஆனால், இங்கு இலங்கையிலே அனைத்து மக்களும் குடியேற்றப்பட்டுவிட்டார்கள், அவர்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள், தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்றுவிட்டார்கள் என்று சொல்லப்படுகின்றது. ஆனால், தமிழர்கள் சொந்த இடங்களில் அகதிகளாக வாழ்கின்ற அந்தத் துர்ப்பாக்கிய நிலை இலங்கையில் மட்டும்தான் காணப்படுகின்றது.    வலிகாமம் வடக்கு மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக பல தடவைகள் நாங்கள் இந்தச் சபையிலே பேசியிருக்கின்றோம். பல தடவைகள் கேட்டிருக்கின்றோம். பசில் ராஜபக்ஷ கூடக் குறிப்பிட்டிருந்தார், நாங்கள் சம்பூரிலே மக்களை விரைவாகக் குடியேற்றுகின்றோம் என்று. ஆனால், இதுவரை அந்தச் சம்பூர் மக்கள் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வலிகாமம் வடக்கு மக்கள் நான்கு நாட்கள் உண்ணாவிரதமிருந்தார்கள். அதற்கு முதல் அவர்கள் தொடர்ந்து போராடினார்கள். ஆனால் அவர்களுடைய ஆறாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து இருநூறு பரப்புக் காணிகள் இன்னும் அரச வசம் இருக்கின்றன. 

அவற்றில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன, இராணுவத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே பல ஹோட்டல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன,  ஜனாதிபதிக்கான மாளிகை கூடக் கட்டப்படுகின்றது. ஆனால், அந்த மக்கள் தொடர்ந்தும் அந்த இடங்களிலே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதற்கான ஒரு விடிவு இந்த ஜனநாயக அரசில் எவ்வாறு கிடைக்கும் என்பதைத்தான் அந்த  மக்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.    இன்னும் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியேற அனுமதிக்கப்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய கேப்பாப்பிலவு மக்கள் தங்கள் சொந்த மண்ணுக்குப் போக முடியாமல் தடுக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே, குறிப்பாக தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் எல்லாம் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.    இதனைவிடச் சிறையிலே வாடுகின்ற தங்களுடைய பிள்ளைகளை விடுதலை செய்து தாருங்கள் என்று பலமுறை தமிழர்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள். சிறையிலே ஆயிரக் கணக்கான அரசியல் கைதிகள் வாடுகின்றார்கள். அவர்களுடைய குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் கண்ணீரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவர்களுடைய விடுதலை தொடர்பாகப் பலமுறை பேசியும்  இந்த ஜனநாயக அரசிடம் நாங்கள் பலமுறை கேட்டும்கூட அவர்கள் தொடர்பான விபரங்களை இந்த அரசினால் வெளியிடக்கூட முடியவில்லை. அப்பாவின் வருகைக்காகக் காத்திருக்கின்ற பிள்ளைகள், தங்களுடைய பிள்ளைகளின் வருகைக்காகக் காத்திருக்கின்ற பெற்றோர்கள் முதலியோருடைய நிலைகளை இந்த அரசு உணர்ந்துகொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்தும் சிறையில் இருக்கின்ற இந்தச் சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கு இந்த அரசு என்ன திட்டத்தை வைத்திருக்கின்றது.   வெள்ளைக் கொடியோடு போன பலர் இன்னும் இந்த நாட்டிலே காணாமலே போயிருக்கின்றார்கள். அவர்களுக்காகப் பலமுறை பேசப்பட்டிருக்கின்றது, பலமுறை கேட்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் எங்கே என்றுகூட அவர்களுடைய பெற்றோர் பலமுறை கேட்டிருக்கின்றார்கள். 

இந்தப் பாராளுமன்றச் சபையில் கூட நான் ஏற்கனவே பலமுறை கேட்டிருக்கின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளுடைய அரசியல்துறையைச் சேர்ந்த பாலகுமாரும் அவருடைய மகனும் யுத்தம் முடிந்து  2009 ஆம் ஆண்டு அரச படைகளுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வந்ததை ‘‘லங்கா கார்டியன்‘‘ பத்திரிகை படத்தோடு செய்தியாக வெளியிட்டிருந்தது. அவர்களோடு எழிலனனையும்அவருடைய மனைவி இராணுவத்திடம் நேரடியாகக் கையளித்திருந்தார். இப்பொழுது எழிலனுடைய மனைவி வடக்கு மாகாண சபையினுடைய ஒரு கௌரவ உறுப்பினராக இருக்கின்றார். யோகரட்ணம் யோகியையும் புதுவை இரத்தினதுரையையும்  அவர்களுடைய மனைவிமார் இராணுவத்திடம் ஒப்படைத்திருக்கின்றார்கள். இவர்கள் ஒரு கண்கண்ட சாட்சியங்களாக இவர்களை ஒப்படைத்தும்கூட  அவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதற்கு எந்தப் பதிலும் இதுவரை இந்த ஜனநாயக அரசினால் வழங்க முடியவில்லை. அதேபோல அரசியல்துறையைச் சேர்ந்த சோ. தங்கன், கரிகாலன், சக்தி, பிரியன், மஜீத், ராஜா போன்றவர்கள் பேபி சுப்பிரமணியம் என்கின்ற இளங்குமரன் போன்றவர்கள் குடும்பத்தோடு சரணடைந்திருக்கின்றார்கள். இவர்கள் தங்களுடைய மனைவி, பிள்ளைகளோடு சென்றிருக்கின்றார்கள். ராஜா தன்னுடைய மனைவி இல்லாமல் மூன்று குழந்தைகளோடு சரணடைந்திருக்கின்றார். இவ்வாறு சரணடைந்தவர்களுடைய பிள்ளைகள் எங்கே? இவர்களுடைய குடும்பம் எங்கே? இவர்களுடைய மனைவிமார் எங்கே? இவ்வாறு ஒரு தமிழ்ச் சமூகத்துக்கு நடந்திருக்கின்ற அநியாயங்களைக் கேட்பதற்குத் தமிழர்கள் ஒரு ஜனநாயக அரசில் உரிமை இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். இவர்களைவிட நிர்வாகத்துறை அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளுடைய நிர்வாக சேவையைச் சேர்ந்த பூவண்ணன், இளஞ்சேரன், தங்கையா, குட்டி, விஜிதரன், நாகேஸ், உதயன், முரளி, மலரவன் ஆகியோரும் இவர்களோடு சேர்ந்து படைத்துறையைச் சேர்ந்த லோறன்ஸ், நாகேஸ், வீமன், பாஸ்கரன், மணியரசன், கல்வித்துறையைச் சேர்ந்த அருள் மாஸ்ரர், தாயகன், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த நரேன், ரவி, மருத்துவத்துறையைச் சேர்ந்த ரேகா, பொருண்மியத்துறையைச் சேர்ந்த சின்னன்ணை, பரப்புரைத் துறையைச் சேர்ந்த சஞ்சய், நிதித்துறையைச் சேர்ந்த ரூபன் ஏனைய துறைகளைச் சார்ந்த உத்தமன், கானகன் போன்றோரும் பிரான்சிஸ் பாதிரியாருடன் இராணுவத்திடம் சரணடைந்திருக்கின்றார்கள்.     

இப்பொழுது இவர்கள் எங்கே இருக்கிறார்கள்? பாதர் பிரான்சிஸுடன் சரணடைந்தவர்களின் நிலை என்ன? நாங்கள் இந்தச் சபையிலே இது தொடர்பாகப் பல தடவைகள் கேட்டிருக்கிறோம்.  இவற்றுக்கு இந்த அரசு எவ்வாறு விடை அளிக்கப்போகிறது?  இந்த உறுப்பினர்களுடைய காலங்கள், இவர்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள், இவர்களுக்கு என்ன நடந்திருக்கிறது? இவர்களை இந்த அரசு எவ்வாறு விடுதலை செய்யப்போகிறது?  இது ஒரு  ஜனநாயக அரசின் முடிவாக எவ்வாறு அமையும்?  தயவுசெய்து இந்த அரசாங்கம் இவற்றை வெளிப்படுத்த வேண்டும்.  இவர்களுக்கு என்ன நடந்தது? இதுவரைகாலமும் இவர்கள் தங்களிடம் சரணடைந்தார்களா இல்லையா?  இவர்களை இராணுவத்தினரிடம் கையளித்தமைக்கான கண்கண்ட சாட்சிகளாக  இவர்களுடைய மனைவிகள்  இருக்கின்றார்கள். அப்படியிருக்கும் பொழுது  நீங்கள் ஏன் இவர்களை விடுதலை செய்ய முடியாது.  இப்பொழுதும் பலர்  காணாமற்போகின்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த 4 ஆம் திகதி கிளிநொச்சியிலிருந்து ஒரு இளைஞன் கடத்தப்பட்டிருக்கின்றான்.  கடந்த ஆவணி மாதம் 13 ஆம் திகதி விநாசிஓடை என்னும் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயார் பச்சை உடை தரித்த மூன்று பேரால் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த மண்ணிலே பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.  நான்   ‘பச்சை உடை தரித்தோர்‘ என்று சொன்னதுக்காக பொலிஸாரால் எனது காரியாலயத்தில் வைத்து விசாரிக்கப்பட்டேன். ஆனால், இந்த மண்ணிலே காணாமற்போனோர் பற்றி நாங்கள் முறைப்பாடு எழுதிக்கொடுத்தால் அதுபற்றி விசாரணை செய்வதற்கு எவருமே இல்லை.     கடந்த 4 ஆம் திகதி இரவு எனது காரியாலயத்துக்குள் புகுந்த சிவில் உடைதரித்த 12 பொலிஸார் என்னை விசாரித்திருக்கிறார்கள். அவர்கள் ஏன் என்னை விசாரித்தார்கள்? எதற்காக எனது காரியாலயத்துக்கு வந்தார்கள்? என்று கேட்டால் அதற்குக் காரணம் சொல்வதற்கு இந்த நாட்டில் ஒருவருக்கும் அருகதை  இல்லாத நிலை காணப்படுகிறது.   

ஆனால், நாங்கள் ஒரு கருத்தைச் சொல்வதற்கு முதல் எங்களை  விசாரிப்பதற்காக  பொலிஸாரும் புலனாய்வாளர்களும்  எங்களுக்குப் பின்னால்  சுற்றித் திரிகிறார்கள்.     தமிழர்களுக்காகப் போராடியவர்கள், தமிழர்களுடைய இன விடுதலைக்காகப் போராடியவர்கள்  யாராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கின்றது. தமிழர்களின் தேசியப் பிரச்சினை விடயத்தில் இலங்கை அரசாங்கம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்று கொண்டிருக்கின்றது. இராணுவ அடக்குமுறையைக் கைவிட்டு அரசாங்கம் நீதி வழங்குமென எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கைகூட இன்று அடியோடு தகர்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த 70 ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப்போவதில்லை. அப்படி நம்பி ஏமாறுவதற்கு தமிழ் மக்களும் தயாராக இல்லை என்பதைத்தான் கடந்தகால வரலாறுகள் நிரூபித்திருக்கின்றன.    பூமிப் பந்திலே ஈழத் தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம், தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம், தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம். இந்த இனத்தினுடைய வரலாற்றில் நாங்கள் சிங்கள மக்களை நிராகரிக்கவில்லை, சிங்கள மக்களை எதிர்க்கவில்லை. இந்த மண்ணிலே நாங்களும் உங்களோடு ஒரு தேசமாக சமவுரிமையோடு வாழத்தான் விரும்புகின்றோம்.  அண்மையிலே ஜனாதிபதி  குறிப்பிட்டிருந்தார், தேர்தல்கள் இந்த நாட்டிலே நடைபெறுகின்றன, இங்கு ஜனநாயகம் இருக்கின்றது என்று. ஒரு நாட்டிலே தேர்தல் மட்டும் ஜனநாயகத்தைக் காட்டாது. ஒவ்வொரு வருடமும் நாங்கள் தேர்தல்களை நடத்த முடியும். எல்லாத் தேர்தல்களையும் நடத்துகின்றபொழுது அந்தத் தேர்தல்கள்தான் ஜனநாயகமாக இருந்தால்  இந்த நாடு எப்பொழுதோ மீட்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், வறுமை மேலோங்கியிருக்கின்றது, வேலையில்லாப் பிரச்சினை தாண்டவமாடுகின்றது. அதிலும் நீங்கள் பிரதேச ரீதியாகப் பாருங்கள்! வரவு  செலவுத் திட்ட உரையிலே ஜனாதிபதி சொல்கின்றார், இலங்கையிலே வறுமை பத்து வீதத்திலிருந்து ஆறு வீதமாகக் குறைக்கப்பட்டிருக்கின்றது என்று. இதனை நீங்கள் யாழ்ப்பாணப் பிரதேசமாக, வன்னிப் பிரதேசமாகப் பிரித்துப் பாருங்கள்! இங்கே வறுமை இருந்ததைவிட அதிகரித்திருக்கின்றது. வேலையில்லாப் பிரச்சினை இருந்ததைவிட அதிகரித்திருக்கின்றது. இங்கே என்ன வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, வறுமை என்பது பிரதேச ரீதியாகப் பார்க்கப்பட வேண்டும். ஆனால், ஒட்டுமொத்த இலங்கையை நீங்கள் பார்க்கின்றீர்கள்! ஆனால், தமிழர் வாழ்கின்ற பிரதேசங்களில் அவர்களுக்கான அபிவிருத்தி, அவர்களுக்கான வேலைவாய்ப்புச் சூழல்கூட மாற்றங்கள் எதையும் காணவில்லை.    

கிளிநொச்சி மாவட்டத்தினுடைய பொன்னாவெளி என்கின்ற கிராமத்தில் 2,200 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை யாரோ சுற்றிவர அடையாளமிட்டு 300 அடி ஆழங்களுக்கு அந்தக் காணிகளை ஆய்வு செய்திருக்கின்றார்கள். அங்கே இருக்கின்ற கற்களைப் புத்தளத்திலே இருக்கின்ற ரோக்கியோ சீமெந்து ஆலைக்காக அவர்கள் கொண்டு வரப் போகின்றார்கள். அவர்கள் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு அங்கிருந்து கற்களை எடுக்கப் போகின்றார்கள். ஏற்கனவே பொன்னாவெளியிலே உப்புத் தண்ணீர் காரணமாக மக்கள் குடியேறி வாழ முடியவில்லை. ஆனால், அங்கு இவ்வாறு கற்கள் தோண்டப்பட்டால் அருகிலே இருக்கின்ற வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு, பாலாவி போன்ற கிராமங்களில் முழுமையாக இருக்க முடியாமல் மக்கள் இடம்பெயர்வார்கள். ஆகவே, இன்று இலங்கையிலே நடைபெறுவது ஒன்று தமிழ் மக்களுடைய சொந்த நிலங்களில் அவர்களுடைய உற்பத்தி செய்யக்கூடிய தொழில்வாய்ந்த நிலங்களில் அவர்களைக் குடியிருக்கவிடாமல் தடுப்பது,  தடுத்து அந்த இடங்களில் இருந்து அவர்களை வெளியேறச் செய்வது, இன்னொன்று அவர்களுடைய சொந்த நிலங்களிலிருந்து அவர்கள் தாங்களாகவே வெளியேறிப் போகக்கூடிய வகையில் அந்த இடங்களைக் கபளீகரம் செய்வது. அவ்வாறு செய்கின்றபோது ஓர் இனச் சுத்திகரிப்பு அங்கு மிகத் தெளிவாக மேற்கொள்ளப்படுகின்றது. ஏனென்றால் அங்கிருக்கின்ற மக்கள் தங்களுடைய இடங்களை விட்டு வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும். அவர்கள் அந்த இடங்களில் வாழ முடியாது.    ஆகவே, இவ்வாறு தொடர்ந்து சென்றவர்களுடைய நிலைமைகளும் இந்த நிலங்கள் பறிக்கப்படுவதும் ஒரு ண்tணூதஞிtதணூச்டூ ஞ்ஞுணணிஞிடிஞீஞு  கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு.  கலாசார ரீதியாக, மத ரீதியாக, நிலப் பறிப்பின் ஊடாக, பெண்களை இராணுவத்துக்குச் சேர்த்தல் ஊடாக, பெண்கள் மீதான வன்முறைகள் ஊடாக இது தொடர்ந்து இடம்பெறுகின்றது. இதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் மீண்டும் வரலாறு உங்களை வேறு திசைக்கு இட்டுச் செல்லும். ஆகவே, இலங்கை அரசு வரலாற்றைச் சரியாகப் புரிந்து வரலாற்றின் பாதையிலே நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை இந்த இடத்தில் கூறி நிறைவு செய்கின்றேன். 

Saturday, December 14, 2013

காதலித்ததால் தூக்கு..!காதலுக்காக பறிக்கப்பட்ட உயிர்கள் வரிசையில் ரிபாத்தின் உயிரும் இணைந்து விட்டது. இனி சட்டம் தன் கடமையை செய்யும்.

ரிபாத் யூசுப் 18 வயதான இளைஞர் குருநாகல் மாவட்டத்தில் வாரியபொல பிரதேசத்தை அண்மித்த பண்டாரகொஸ்வத்த மடிகே மிதியால பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஒரு சகோதரி நான்கு சகோதரர்களைக் கொண்ட ரிபாத் குடும்பத்தின் கடைக்குட்டி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை வரை கற்றலை மேற்கொண்டிருந்த ரிபாத் பின்னர் சந்தை வர்த்தகத்தை தேர்ந்தெடுத்து அந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வந்தார்.இந்நிலையில் 18 வயது இளைஞன் என்ற வகையில் ரிபாத்துக்கு ஒரு காதலியும் இருந்தார். பொதுவாக வீட்டாருக்கு தெரியாமல் இளைஞர், யுவதிகள் தொடர்ந்து வரும் காதல் தொடர்பை ஒத்த தொடர்பே அது. எனினும் ரிபாத் பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) காதல் தொடர்பை மடிகே மிதியால பிரதேசமே அறிந்திருந்தது எனலாம். ஊரே அறியும் போது அதனை இரு வீட்டாரும் அறியாமலிருக்க வாய்ப்பில்லை.எனினும் இரு வீட்டாரும் இது தொடர்பில் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டதாக அறிய முடியவில்லை.அன்று ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி வடமேல் மாகாண சபை தேர்தலுக்கான பிரசார காலம்.தயார் செய்த இரவு உணவான ரொட்டியையும் இறைச்சிக் கறியையும் உட்கொண்ட ரிபாத், பிரசாரக் கூட்டம் ஒன்றுக்கு செல்லவே பெற்றோரிடமிருந்து அந்த இரவு வேளையில் விடை பெற்றுள்ளார். தான் நிரந்தரமாக விடைபெறப் போவதை அறியாமல்.தனது உறவு முறை சகோதரர் ஒருவரையும் மைத்துனர் ஒருவரினதும் துணையுடன் சென்ற ரிபாத் தேர்தல் பிரசார கூட்டத்தின் இடை நடுவிலேயே வீடு நோக்கி பயணிக்கலானார்.
 
வரும் வழியே உடன் சகோதரன் மைத்துனருடன் ஜஸ்கிறீம் சாப்பிட்டவாறு சிரித்து கதைத்துக் கொண்டு வந்த ரிபாத்தின் கையடக்கத் தொலைபேசி சிணுங்கவே ரிபாத் தனியானார். உடன் வந்த சகோதரரும் மைத்துனரும் சற்று முன்னே நடக்க ரிபாத் தொலைபேசியில் உரையாடியவாறு வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அது காதலியிடம் இருந்து வந்த அழைப்பு என்பதை நான் எழுத வேண்டியதில்லை. மைத்துனருக்கும் சகோதரருக்கும் விடை கொடுத்த ரிபாத் ஐஸ்கிறீம் கொள்வனவு செய்தவனாய் தன்னை அழைத்த காதலியை காண எவரும் அறியாவண்ணம் காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.காதலியின் அறை ஜன்னல் வழியாக ரிபாத்தும் காதலி பாத்திமாவும் காதல் மொழி பேசிக் கொண்டிருந்துள்ளனர்.இந்நிலையில் அதிகாலை தொழுகைக்காக எழுந்த ரிபாத்தின் தந்தை இரவு நேரம் பிரசாரக் கூட்டத்துக்கு சென்ற தனது மகன் வீடு வந்து சேராததை அவதானித்துள்ளார். இரவு 10 மணிக்குள் எங்கு சென்றிருப்பினும் வீடுவந்து சேரும் பழக்கமுடைய ரிபாத் அதுவரை வீடு வந்து சேராமையை அடுத்து தந்தை கலக்கமுற்றுள்ளார்.
 
பின்னர் ரிபாத்தின் சகோதரரின் அறையையும் பார்வையிட்ட தந்தை ரிபாத் எங்கே? என வினவினார். எனினும் ரிபாத் வரவில்லை என சகோதரர் பதிலளிக்க, பிரசார கூட்டத்தை காணச் சென்ற உறவு முறை சகோதரரையும் மைத்துனரையும் தொடர்பு கொள்ள அவர்களோ ரிபாத் வீடு வந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்நிலையில் ரிபாத்தின் தந்தை தனது மகனின் கையடக்கத் தொலைபேசியை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அது செயலிழந்திருந்தது. இரு கையடக்கத் தொலைபேசிகளை ரிபாத் பயன்படுத்தி வந்த போதும் அவை இரண்டுமே செயலிழந்திருந்தன.இதனால் மேலும் அச்சம் கொண்ட ரிபாத்தின் தந்தை ரிபாத்தின் சகோதரர்களின் உதவியுடன் ரிபாத்தின் நண்பர்களை தொடர்பு கொள்ள அவர்களோ தமக்கு தெரியாது என்ற பதிலையே விடையாகக் கொடுத்தனர்.இந்நிலையில் அந்த அதிகாலைப் பொழுதில் ரிபாத்தின் சகோதரர் தனது மோட்டார் சைக்கிளில் ரிபாத்தின் நண்பர்களின் வீடுகளை நோக்கி சென்று தனது இளைய சகோதரன் குறித்து விசாரித்து ஏமாற்றமடைந்தவராய் உறவு முறை சகோதரர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு களைத்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ரிபாத்தின் வீட்டுக்கு பிரதான பாதை வழியாக செல்வதை விட மடிகே மிதியால மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானமூடாக செல்வது இலகுவானதாகும். இந்நிலையில் பாடசாலையூடான அந்த வழியை பலரும் பயன்படுத்தி வந்தனர். அதனூடாக மோட்டார் சைக்கிளை செலுத்திய ரிபாத்தின் சகோதரரும் மற்றைய நபரும் கண்ட காட்சி அவர்களின் இரத்தத்தை உறையச் செய்தது.
 
இரவு வேளையில் பிரசார கூட்டத்தை காணச் சென்ற ரிபாத் பாடசாலை கட்டிடமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்ட அவ்விருவரும் அலறியடித்துச் சென்று தூக்கிலிருந்து இறக்கி காப்பாற்ற முனைந்தனர். எனினும் அப்போது ரிபாத்தோ இவ்வுலகிற்கு விடை கொடுத்து பல மணி நேரங்கள் கடந்திருந்தது.அப்போது நேரம் காலை 6.30 மணியிருக்கும் பாடசாலை கட்டிடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ரிபாத்தின் சடலம் மீட்கப்பட்ட செய்தி காட்டுத் தீயாய் ஊரெங்கும் பரவியது. ஊரார் பாடசாலை நோக்கி படையெடுக்க தகவலானது வாரியபொல பொலிஸாருக்கும் மிதியால பிரதேசத்தின் திடீர் மரண பரிசோதகருக்கும் சென்றடைந்தது. இந்நிலையில் அவர்களும் ஸ்தலத்துக்கு விரைய தூக்கிலிருந்த சடலம் மீட்கப்பட்டு குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டது.
 
பின்னர் வாரியபொல பொலிஸாரும் திடீர் மரண விசாரணை அதிகாரியினதும் தீர்ப்புகளுக்கமைய ரிபாத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறி சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விடயம் நிறைவுக்கு வந்ததாய் கொள்ளப்பட்டது.இந் நிலையில் அன்றைய தினமே ரிபாத்தின் ஜனாஸா நல்லடக்கமும் இடம்பெற்ற நிலையில் ரிபாத்தின் மரணத்தில் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.தனது மகனின் மரணத்தில் சந்தேகமுள்ளதாகவும் வாரியபொல பொலிஸார் கூறுவதைப் போன்று தற்கொலை செய்து கொள்ள தனது மகனுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையெனவும் குறிப்பிட்டு அது தொடர்பில் விசாரணை நடத்தக் கோரி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குருநாகலை பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு ரிபாத்தின் குடும்பத்தினரால் முறைப்பாடளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து குறித்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு விசாரணை நடத்தும் பொறுப்பு குளியாப்பிட்டி பிராந்தியத்துக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோவிடம் ஒப்படைக்கப்பட்டது.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோவின் கீழ் பிங்கிரிய பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி எச்.எம்.பாலித்த ஹேரத் சார்ஜன் குணவர்த்தன மற்றும் கான்ஸ்டபிள்களான சில்வா தர்மபால நிஹால் உள்ளிட்ட விஷேட குற்றவியல் பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்தது.கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி விசாரணைகளை முன்னெடுத்த இந்த பொலிஸ் குழு ரிபாத்தின் மரணம் தற்கொலை அல்ல ஒரு மனிதப் படுகொலை என்பதை கண்டறிந்துள்ளது.
 
விசாரணைகளை பொறுப்பேற்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோ யாரும் இணங்காணா வண்ணம் மடிகே மிதியாலை பிரதேசத்துக்கு மாறு வேடத்தில் பொலிஸாரை அனுப்பி தகவல் சேகரிக்கலானார். அதன் பிரதிபலனாகவே மறைக்கப்பட இருந்த ஒரு மனிதப் படுகொலை தொடர்பான விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.இந்நிலையில் ரிபாத் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை திரட்டிய பொலிஸார் அவர் யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.தொலைபேசி குரல் பதிவுகள் உள்ளிட்ட பல தகவல்களை சேகரித்திருந்த விசாரணை குழு பொதுவாக தற்கொலை விவகாரம் எனில் கூறப்படும் காரணங்களில் காதல் விவகாரம் தொடர்பிலும் தேடியது. இதன் போது இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் காதலியின் சகோதரனால் தாக்கப்பட்டமை தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வந்தமை தொடர்பான தகவல்களும் பொலிஸாருக்கு கிடைத்தன.
 
இதனைவிட உறுதியான சான்றுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து ரிபாத்தை தூக்கிட்டு கொலை செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ரிபாத்தின் காதலியின் தந்தையான அமீர்தீன் ஸாதிகீன் சகோதரர் மொஹமட் ஸாதிகீன் மொஹம்மட் யாஸீம் மற்றும் பும்மன்ன பிரதேசத்தை சேர்ந்த பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என கருதப்படும் இப்ராலெப்பே அன்ஸார் ஆகிய மூவரையும் விஷேட குற்றவியல் பொலிஸ் குழு கைது செய்தது.நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட விஷேட தடுப்புக் காவல் உத்தரவுக்கமைய இவர்களை பொலிஸார் விசாரித்து வந்த நிலையில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.இந் நிலையில் கடந்த சனியன்று வாரியபொல நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ. எஸ். கே. பாலபெட்டபெத்தியின் உத்தரவுக்கமைய அவரின் முன்னிலையில் ரிபாத்தின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.சுமார் 3 மாதங்களின் பின்னர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டது.கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் சட்ட வைத்திய அதிகாரிகளின் பூரண வழி நடத்தலின் கீழ் தோண்டி எடுக்கப்பட்ட ரிபாத்தின் 5 அடி 4 அங்குலம் கொண்ட சடலமானது இன்று விஷேட பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளது.
 
உதவிப் பொலிஸ் அத்தியட்சர் பியசிறி பெர்னாண்டோ தலைமையில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் காதலியின் அழைப்பின் பேரில் ரிபாத் அங்கு சென்றுள்ளதாகவும் அதன் போது காதலியின் தந்தை சகோதரன் மற்றுமொரு நபரால் அவர் பலமாக தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளதுடன் அது தொடர்பில் சந்தேக நபரிடம் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ரிபாத் காதலியுடன் 23ஆம் திகதி இரவு வெகுநேரம் கதைத்ததை உறுதி செய்த பொலிஸார் ரிபாத்தின் காதலியிடமும் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.ரிபாத்தின் மரணம் அல்லது ரிபாத் தாக்கப்பட்டதை காதலி அறிந்திருப்பதாக சந்தேகிக்கும் பொலிஸார் அவர் அதனை மட்டும் மறைப்பதாக குறிப்பிடுகின்றனர்.எவ்வாறாயினும் ரிபாத்தை சந்தேக நபர்கள் தாக்குவதை அவதானித்த நேரில் கண்ட சாட்சியங்கள் உள்ளதாக குறிப்பிட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோ குறித்த இளைஞனை அடித்து மயக்கமடையச் செய்துள்ள நிலையில் அதன் பின்னர் மிதியால மத்திய மகா வித்தியாலய பாடசாலையின் பின்னால் மண்டபத்தில் உள்ள 12ஆம் வகுப்பை ஒட்டியுள்ள தகரக் கொட்டிலின் கூரைப் பலகையில் தூக்கிலிட்டு கொலை செய்துள்ளதாக சுட்டிக் காட்டுகிறார்.
 
இவ்வாறு தூக்கிலிட பாடசாலை கிணற்று வாளி கயிற்றை பயன்படுத்தியுள்ளதாக கூறும் பொலிஸார் அக்கயிறு கட்டப்பட்டிருந்த கிணற்று வாளியையும் ரிபாத்தின் இரு கையடக்கத் தொலைபேசிகளையும் இதுவரை காணவில்லை என குறிப்பிடுகின்றனர்.அத்துடன் ரிபாத்தின் கழுத்தில் போடப்பட்டிருந்த கயிறு முடிச்சும் இது கொலை என்பதை பிரதிபலிப்பதாக சுட்டிக்காட்டும் விசாரணைக் குழு சந்தேக நபர்களின் தொழில் முறைமைகளுடன் ஒப்பிட்டு அம்முடிச்சு தொடர்பில் பொதுமக்கள் முன்வைக்கும் சந்தேகமும் மறுப்பதற்கில்லை என்கின்றனர்.இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.காதலித்ததற்காக தூக்கிட்டு  செய்யப்பட்டிருப்பதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ள இந்த கொலை தொடர்பான செய்தி முழு பிரதேசத்தையும் அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில் மறைக்கப்பட்டு இருந்த இந்த கொலை தொடர்பில் மர்மங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். காதலுக்காக பறிக்கப்பட்ட உயிர்கள் வரிசையில் ரிபாத்தின் உயிரும் இணைந்து விட்டது. இனி சட்டம் தன் கடமையை செய்யும்.

Saturday, December 7, 2013

ஒரு குறிப்பிட்ட இன வர்க்கத்தின் தலைவராக ஒரு நாட்டின் தலைவர் செயற்படுவது ஒரு ஜனநாயக நாட்டின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயற்பாடாகும்...
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை புறம் தள்ளிவிட்டு , பல்லின மக்கள் வாழும் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இன வர்க்கத்தின் தலைவராக ஒரு நாட்டின் தலைவர் செயற்படுவது ஒரு ஜனநாயக நாட்டின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயற்பாடாகும் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன்  இந்த வரவு  செலவுத் திட்டம்  நாட்டு மக்களின் வாழ்க்கைத் திறன், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதாக அமையவில்லை எனவும் தெரிவித்தார்.   பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற வரவு  செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.   அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்;  இலங்கையின் வரவு  செலவுத் திட்ட பற்றாக்குறையானது தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே   உள்ளது. அதாவது அரசாங்கத்தினது எதிர்பார்த்த வருமானத்தை விட அரசாங்கத்தினது செலவானது மிக உயர்வாகக் காணப்படுகின்றது. இந்நிலையானது   அரசாங்கத்தினது இறைக் கொள்கையின் திட்டமிடலில் காணப்படும் குறைப்பாட்டினையே தெளிவுபடுத்துகின்றது.  இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதியில் இலங்கை தலா வருமானத்தில் ஆசியாவிலே மிக உயர்வான இடத்தினை வகித்து வந்தது. அதாவது ஜப்பான், மலேசியா என்பவற்றுக்கு அடுத்ததாக இலங்கை 3 ஆவது செல்வந்த நாடாக ஆசியாவில் திகழ்ந்தது. இலங்கைக்கு அடுத்த  படியாகவே தென்கொரியா, தாய்லாந்து , இந்தோனேஷியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகள் காணப்பட்டன. இன்று இலங்கையின் துண்டு விழும் தொகை நிலையை வைத்து என்ன என்பதை  சிந்திக்கும் போது இதுவும் ஆசியாவில் ஒரு ஆச்சரிய நாடாகவே காட்டுகின்றது.  பொதுவாக கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்த சூழலாலும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உ தவும் வகையில்   உதவிகள் வழங்கும் திட்டம் எதுவும் இவ் வரவு  செலவுத் திட்டத்தில் இல்லை.  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்த  85,000 இற்கும் மேற்பட்ட  மக்கள் இன்னும் குடியேற்றப்படாத நிலையிலும்  குடியேற்றப்பட்ட மக்களுக்கான வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள்  முற்று முழுதாக ஏற்படுத்தப்படாத நிலையிலும் இவ் வரவு  செலவுத் திட்டத்தில் மீள்குடியேற்றத்திற்கான எந்த நிதி ஒதுக்கீடும்  இடம்பெறவில்லை. சென்ற  ஆண்டிலும் இதே தவறை இவ் அரசாங்கம் வரவு  செலவுத் திட்டத்தில் காட்டியுள்ளது.   

2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரை  மட்டக்களப்பு   மாவட்டத்தில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு 13,893 முழுச் சேதம் அடைந்ததற்கான வீடுகள் வழங்கப்பட வேண்டிய நிலையில் இதுவரை 3918 வீடுகளே 14 பிரதேச செயலகப் பிரிவிலும் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 9975 வீடுகள் வழங்கப்பட வேண்டும். இம் மக்கள் இன்னும் சிறு குடிசைகளில் பல துன்பங்களுக்கு மத்தியில்  வாழ்கின்றனர். இவர்களுக்கு வீடு அமைப்பதனால் மூன்றரை இலட்சம், ஒரு வீட்டுக்கு என்ற வகையில் கிட்டத்தட்ட 324 மில்லியன் ரூபா தேவை.   வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த கிழக்கு மாகாணத்தில் குடியேறிய குடும்பங்களில் கிட்டத்தட்ட 1500 குடும்பங்களுக்கு மேல் நிரந்தர வீட்டு வசதி இன்றி மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.  மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு அடிப்படை உதவியாக வழங்கப்படும் 25,000 ரூபா பணமானது வெல்லாவெளிப்  பிரதேசம், வாகரைப் பிரதேசம் ஆகிய இரண்டுக்குமே முற்று முழுதாக வழங்கப்பட்டுள்ளன.  ஆனால், ஏனைய பிரதேசங்களில் மீள்குடியேறிய 29,851  குடும்பங்களுக்கு இன்னும் இவ் உதவி வழங்கப்படவில்லை.  கிட்டத்தட்ட இதற்கு 746 மில்லியன் ரூபா தேவை. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கை இந் நிதி வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியும் அரசாங்கம் இது சார்பாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.  யுத்த சூழலால் உயிர் இழந்தவர்கள், அங்கங்களை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை பல மில்லியன் கணக்கில் இன்று வரை  மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்படாமல் உள்ள நிலையில் இவ் வரவு   செலவுத் திட்டத்தில் கடந்த யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் உள்ள 89,000  கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரம் சார்பாகவோ அல்லது 20,000  இற்கும் மேற்பட்ட பெற்றோரை இழந்த பிள்ளைகள்  சார்பாகவோ பல ஆயிரக்கணக்கான உடல் உறுப்புகளை  இழந்த விசேட  தேவைக்குரியவர்கள் சார்பாகவோ இவ் வரவு  செலவுத் திட்டம் எதனையும் வெளிப்படுத்தவில்லை. 


பொதுவாக வரவு  செலவுத் திட்டமானது விவசாயிகள் , மீனவர்கள் , உழைக்கும் வர்க்கத்தினர், அரச தனியார் துறையினர் என சகல பகுதி மக்களின் வாழ்க்கைக்கு உதவுவதாக அமையவில்லை.   முதன்மைபடுத்தி எமது வடக்கு, கிழக்கு   மக்கள் பாலங்களையும் பெரும் தெருக்களையும் எதிர்பார்க்க வில்லை.  தங்களது பூர்வீக மண்ணில் சுதந்திரமாகவும் , நிம்மதியாகவும், எதுவித தடையுமின்றி தங்களை தாங்களே ஆட்சி செலுத்தி கொண்டு வாழவே விரும்புகின்றனர்.  அத்தோடு தங்களது காணாமல்போன பறிகொடுத்த உறவுகளையும் சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்ட உறவுகளையும் தங்களால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகளையும் தங்களிடம் கையளிக்குமாறு கோரி நிற்கின்றனர்.    வடக்கு , கிழக்கு   தமிழ் மக்களை புறம் தள்ளி விட்டு பல்லின மக்கள் வாழும் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இன வர்க்கத்தின் தலைவராக ஒரு நாட்டின் தலைவர் செயற்படுவது ஒரு ஜனநாயக நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயற்பாடாகும்.  இவ் வரவு  செலவுத் திட்டத்தில் கைத் தொழில் சாலைகளை உருவாக்குவது சார்பாகவோ, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால்  சிதைக்கப்பட்ட கைத் தொழில் சாலைகளை புனரமைப்பது சார்பாகவோ எவ்வித ஒதுக்கீடுகளும் இல்லை.    குறிப்பாக கடந்த கால யுத்தத்தால் வடக்கு , கிழக்கு மாகாணத்தில் பல கைத் தொழிற் சாலைகள் அழிக்கப்பட்டுள்ளன. சில புனரமைக்க வேண்டியுள்ளன. குறிப்பாக வட மாகணத்தில்  பரந்தன் இரசாயன கூட்டுத் தாபனம்,  ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனம், வட்டக்கச்சி அரசினர் விவசாய பண்ணை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை,  நீர்வேலி கண்ணாடித் தொழிற்சாலை ,  நாவற்குழி அன்ரிஸ்   இறால்  கம்பனி,  ஒட்டுச்சுட்டான்  ஒட்டுத் தொழிற்சாலை,  கிளிநொச்சி ஸ் கந்தபுரம் சீனித் தொழிற்சாலை என்பன முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, இவை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்.  கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனை  தேசிய கடதாசி கம்பனி, கும்புறுமூளை அச்சகம் ,தேவபுரம் அரிசி ஆலை, மண்டூர் ஓட்டுத் தொழிற்சாலை உட்பட்ட பல தொழிற்சாலைகள் புனரமைக்கப்பட வேண்டியுள்ளன. இவைகளை உருவாக்கியும்  புனரமைத்தும் தொழிற்சாலைகளை இயங்கச் செய்தால் இன்று கல்வி ரீதியாக  பட்டம் பெறாமல் உள்ள இளைஞர், யுவதிகள்  கணவனை இழந்த  பெண்கள் தொழில் வாய்ப்பை  பெற்றுத் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். ஆனால், இப் பகுதியில் பெரும்பான்மையான  மக்கள் தமிழ் பேசும் இனம் என்பதாலேயே அரசாங்கம் அதில் அக்கறையின்றி செயற்பட்டு வருகின்றது.   வடக்கு, கிழக்குப் பகுதிகளான பெரும்பான்மை   இன மக்கள் ஒரு போதும் வாழாத பகுதிகளிலும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி வருவதுடன், இராணுவத்தின் உதவியுடன் பௌத்த விகாரைகளை தாபித்திருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இராணுவ முகாம்களில் 23 இற்கும்  மேற்பட்ட பௌத்த விகாரைகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. இவர்கள் இங்கிருந்து வெளியேறும் போது இப் பகுதி பௌத்த குடியிருப்பாக மாறும் நிலை தோன்றியுள்ளது.   இன்று இவ் வரவு  செலவுத் திட்டத்தில் 20,000 கால் நடைகளை இறக்குமதி செய்வது சார்பாக இவ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடை மேய்ச்சல் தரைகள் பலவற்றை தற்போது வெளி மாவட்டங்களில் வசிக்கும்  ஊர் காவற்டையினர்  மற்றும் பெரும்பான்மை இனத்தவர்கள் கைப்பற்றி உள்ளனர். 

இதனால் 270,000  இற்கும் மேற்பட்ட கால் நடைகளுக்கான மேய்ச்சல்  தரை பாதிப்பால் இன்று கால் நடைப் பண்ணையாளர்களும் , விவசாயம் செய்யும் விவசாயிகளும்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வெளிமாவட்ட பெரும்பான்மை இன மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறி  காணிகளைப் பிடித்து விவசாயத்தில் ஈடுபடுவதற்கு இராணுவத்தினர் பெரும் உதவி புரிந்து வருகின்றனர். கிழக்கு மாகாண சபை , மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் போன்றவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்தும் இன்று ஒரு நிலையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.  இவ் விடயம் சார்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் , கால் நடை பண்ணையாளர்களின் தொழில் முயற்சியை பாதுகாக்குமாறு இச் சபையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.   யுத்த காலத்தில் இடம்பெறாத பல  சம்பவங்கள் தற்போது ஆரம்பமாகி உள்ளன. வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்பு மக்களை கிறிஸ் மனிதன் மூலம் பயன்முறுத்தினார்கள். ஆனால் தற்போது  இந்து கோயில்களை உடைத்து கொள்ளை  இடுவது, இந்து ஆலயங்கள் இடித்து பௌத்த விகாரை  தாபிப்பது  போன்ற நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளன.  அண்மையில்  வடக்கு பகுதியில் மாத்திரம் 26 ஆலயங்களில் கொள்ளை இடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.     கொடிகாமம் வரணியில் உள்ள 300 ஆண்டு பழமை வாய்ந்த கண்ணகி அம்மன் ஆலய சிலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.   பொன்னாலை வரதராஜப் பெருமாள்  கோயிலில் 150 பவுண் நகை கொள்ளை,  வண்ணார் பண்ணை நாச்சிமார் கோயில் தேர் முட்டியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு  இட்டது  முல்லைத்தீவு மாவட்ட கொக்குலாய், கொக்குத் தொடுவாய் ஆலய  கொள்ளைகள் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.    வடக்கு, கிழக்கு மாகாணங்களை இராணுவ கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தமிழ் மக்களை அடக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒடுக்க அரசாங்கம் முற்படுகின்றது.  

பொதுவாக இன்று 150,000 இற்கும் மேற்பட்ட  இராணுவம் வடக்கு, கிழக்கில்  குவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்தும் எதற்கு  இத் தொகை இராணுவம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரமே  இராணுவத்தில் இருந்தவர்களையே ஆளுநர்களாக வைத்துள்ளது. இது எதற்காக என இச் சபையை கேட்க விரும்புகின்றேன்.   இன்று 12 ஆயிரம் போராளிகளை இயல்பு வாழ்க்கைக்கு விடுவித்துள்ளதாக கூறும் இவ் அரசாங்கம்  ஏன் அவர்களின் பெயர் விபரங்களை  வெளியிடவில்லை  அதுமட்டுமன்றி, யுத்தம்  முடிந்து 4 வருடங்களுக்குப் பின்பே காணாமல் போனோர் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழு,  இது சர்வதேசத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் ஏமாற்றும் முயற்சி.   வடக்கு, கிழக்கில்  பெருகியுள்ள கணவனை இழந்த பெண்கள், வறுமைக் கோட்டில் வாழும் பெண்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு  வேலை தேடும் வறிய குடும்ப தலைவர் , தலைவி வேலை தேடி பணிப் பெண்களாக  வெளிநாட்டுகளுக்கு  செல்கின்றனர்.  இவர்களில் பணிப் பெண்ணாக செல்லும் பலர் வீட்டு எஜமானால் பாலியல் துஷ்பிரயோõகத்துக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். அத்தோடு, இவர்களது பிள்ளைகள்  பெற்றோர்களின் கண்காணிப்பில் இன்மையால் பலர் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கும் ஆளாகின்றனர். பிள்ளைகள் பெற்றோரை பிரிந்து உள ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.   2010  தொடக்கம் 2013 வரையான காலப் பகுதியில் தாய் ,தந்தை வெளிநாடு சென்றதால் எமது நாட்டில் 1661 சிறுவர்கள், சிறுவர்  துஷ்பிரயோகத்துக்கு ஆளானதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதற்கக் காரணம் அவர்களுக்கான ஒழுங்கான சுய தொழில் மற்றும் தொழில் ஏற்பாடுகள் எமது நாட்டில் மேற்கொள்ளப்படாமை . இவ்விடயம் தொடர்பாக 2014 ஆம் ஆண்டுக்கான  இவ் வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித ஏற்பாடுகளும்  அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை.   

ஆனால், இராணுவத்திற்கு இவ்வரசாங்கம் மாடி வீடு கட்டுவதில் காட்டும் அக்கறையை  கடந்த யுத்த சூழலால் கணவனை இழந்தும் வறுமையாலும் குடும்பத்தை கட்டியெழுப்ப முடியாது தமது வாழ்வாதாரத்தினை  பற்றி ஏங்கி கொண்டிருக்கும் எம் மக்கள் மீது ஏன் காட்டக் கூடாது ? 2014 ஆம் ஆண்டு வரவு  செலவுத் திட்டத்தில் பிரிவெனா பாடசாலை கல்வி என்ற ரீதியில் பௌத்தத்திற்கும் பௌத்த குருமார் கல்விக்கும் பெரும் தொகை  நிதியை  வழங்கியுள்ள வேளை இந் நாட்டின் ஏனைய மதங்களாக இந்து, இஸ்லாமிய , கிறிஸ்தவ மத கல்விகளுக்கும் மற்றும் அவர்களது அறக் கல்விகளுக்கும் எதுவும்  ஒதுக்கவில்லை. ஏனெனில் பௌத்த மதத்துக்கு மாத்திரமே  இங்கு தனி  அந்தஸ்து வழங்கப்படுகின்றது. ஏனைய மதங்கள் இவ் வரசாங்கத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இங்கு மத உரிமைகள் ஒடுக்கப்படுகின்றன.  வன ஜீவராசிகள் ஊடுருவலை தடுக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக இவ்வரவு செலவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது. ஆனால்  ஊழியர்களுக்கான கொடுப்பனவு,  வாகன கொள்வனவு  என்பவற்றுக்கே  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வனஜீவராசிகளின் ஊடுருவலை தடுக்க மின்சார வேலி இடுவதற்கும் வேறு வகைகளை கையாளவோ என வனஜீவராசிகள் ஊடுருருவலைத் தடுப்பதற்கோ இந் நிதியில் சுட்டிக்காட்டப்படவில்லை.   அத்தோடு ,  மீன் பிடி தொழில்  சார்பான ஒதுக்கீடுகள் சில இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இவ் ஒதுக்கீடுகள் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகணங்களான இவ்விரு மாகாணங்களிலும் கூடுதலாக செலவிடப்பட வேண்டும்  . யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகணம் என்ற வகையில்  கவனிக்கப்பட வேண்டும். காரணம் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர்  வட மாகாணமானது  25 சதவீத பங்களிப்பினை இந்நாட்டின் மீன்பிடி உற்பத்தியில் வழங்கியுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.   இன்று புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகள் பலர் இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளுக்கு 7 நாட்களுக்கு ஒரு தடவை உட்படுகின்றனர். இதனால் வெளியில் செல்ல முடியாதவாறும் தொழில் செய்ய முடியாதவாறும்  தடுக்கப்படுகின்றனர்.

 இவர்கள்  உளரீதியான துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.  தமது உயிரை பாதுகாக்கும் வகையில் கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கும் செல்ல முற்பட்டு ஆபத்தான நிலையகளை எதிர்கொள்கின்றனர்.   இந் நிலையி ல் இப்  புனர்வாழ்வு  வழங் கப்பட்டவர்களுக்கான ஒரு நிலையான தொழில் முயற்சித் திட்டத்தை இவ் வரவு  செலவுத் திட்டம் ஏற்படுத்தி அவர்களை சுதந்திரமாகவும், புலனாய்வு ப்பிரிவின்  துன்புறுத்தல் இன்றியும் வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என இச் சபையில் கோரிக்கை விடுக்கின்றேன்.  வரவு  செலவுத் திட்டம் என்பது அரசாங்கம் தனக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கின்ற வருமானங்களையும் அதற்கான வழிமுறைகளையும் தான் எதிர்காலத்தில் மேற்கொள்ள இருக்கும் செலவினங்களையும் முற்கணிப்புச் செய்து நிதி அமைச்சரால் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாகும்.   ஒரு சிறந்த வரவு  செலவுத் திட்டமானது நாட்டுக்கும் நாட்டு மக்களது பொருளாதாரம் வாழ்க்கைத்திறன்,ö பாருளாதார வளர்ச்சி, பொருளாதார வசதி நிலை போன்றவற்றினை மேம்படுத்தக் கூடிய  நிலையாக அமைய வேண்டும். ஆனால் இவ் வரவு செலவுத் திட்டம் அவ்வாறு அமையவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதாகவும் அவர் கூறினார். 

Thursday, November 14, 2013


1987 இல் கையெழுத்தான ஜெயவர்தன  ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தின்படி 13 ஆவது சட்டத் திருத்தத்தை இலங்கை இன்னும் கொண்டு வரவில்லை.கொமன்வெல்த் நாடுகளின் கூட்டத்திற்கு பிரதமர் போகவில்லை. அவருக்கு பதிலாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப் போகிறார். இதிலென்ன பெரிய ராஜதந்திரமோ, ராஜபக்ஷ அரசுக்கு எதிரான கண்டனமோ இருக்கிறது என்பது தெரியவில்லை. பிற மாநிலப் பத்திரிகைகள் பிரதமரும் மத்திய அரசும் தமிழக அரசியல் கட்சிகளின் பயமுறுத்தலுக்கு அடிபணிந்து விட்டதாகவும், மாநிலத்தின் வற்புறுத்தலுக்காக தேசிய நலன் பலி கொடுக்கப்பட்டிருப்பதாக விமர்சிக்கின்றன. இந்தியா என்பது பல மாநிலங்களின் கூட்டமைப்பு. மாநில உணர்வுகளை மதித்துதான் மத்திய அரசு செயல்பட்டாக வேண்டும். அதனால், தமிழக அரசியல் கட்சிகளின் வற்புறுத்தலுக்கு மத்திய அரசு அடிபணிந்து விட்டது என்கிற குற்றச்சாட்டில் அர்த்தம் இல்லை. எல்லா பிரதமர்களும் எல்லா காமன்வெல்த் மாநாடுகளுக்கும் போவதில்லை. பிரதமரே கலந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. இதற்கு முன்  2011இல் நடந்த கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை. துணை ஜனாதிபதி தான் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் நியூசிலாந்துப் பிரதமரும் கலந்து கொள்ளவில்லை. 

அதனால் பிரதமர் கலந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றும் புதிதல்ல. 1987 இல் கையெழுத்தான ஜெயவர்தன  ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தின்படி 13 ஆவது சட்டத் திருத்தத்தை இலங்கை இன்னும் கொண்டு வரவில்லை. எந்தவித அதிகாரப் பகிர்வுக்கும் இலங்கை தயாராகவும் இல்லை. இப்போது இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் நடைபெற்று அங்கே தமிழர்களின் கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும் நிலைமை. அதனால், வடக்கு மாகாண அரசுக்கு கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுத் தரவேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு. 1976 இல் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்குப் பிறகு இலங்கையில் நடக்க இருக்கும் பெரிய சர்வதேச நிகழ்வு கொமன்வெல்த் மாநாடுதான். இந்த இடைவெளியில் அங்கே எந்தவொரு சர்வதேச நிகழ்வும் நடைபெறாமல் இருந்ததற்குக் காரணம், அங்கிருந்த அரசியல் சூழல். இப்போது, இப்படி ஒரு மாநாட்டைக் கூட்டி, இலங்கையில் எல்லாமே சகஜநிலைக்குத் திரும்பிவிட்டன என்று காட்ட முற்படுகிறது ராஜபக்ஷ அரசு. கொமன்வெல்த் மாநாடு வெற்றிகரமாக நடப்பது ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும், அவரது அரசுக்கும் ஒரு கௌரவப் பிரச்சினை. அதை பயன்படுத்தி, 13 ஆவது சட்டத்திருத்தம் கொண்டு வர முடிந்திருந்தால், அதை இந்தியாவின் வெற்றியாகக் கொள்ள முடியும். 13 ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் கிடைக்கும் அதிகாரப் பகிர்வுக்குப் பிறகு கொமன்வெல்த் மாநாட்டையொட்டி மாநில சுய உரிமையுடன் கூடிய வடக்கு மாகாணத்திற்கும் பிரதமர் மன்மோகன் சிங் விஜயம் செய்திருந்தால், அது நமது இராஜதந்திர வெற்றியாக இருந்திருக்கும். வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் கரத்தை பலப்படுத்துவதாகவும், அங்கே வாழும் தமிழர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாகவும் அமைந்திருக்கும். மத்திய அரசின் அணுகுமுறையில் அப்படியெல்லாம் எந்தவொரு சிந்தனையும் இருந்ததாகவோ, இருப்பதாகவோ தெரியவில்லை. 

குறைந்தபட்சம், பிரதமர் தமிழக முதல்வரை அழைத்துக் கலந்து பேசி ஒரு முடிவெடுத்திருந்தால், தமிழகக் கட்சிகளை எல்லாம் அழைத்துப் பேசி முடிவெடுத்திருந்தால்கூட, கொமன்வெல்த் மாநாட்டை வட இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த பயன்படுத்தி இருக்க முடியும். இலங்கையில் போர் நடந்த போது, பதவி சுகத்துக்காக, இனப்படுகொலையை வேடிக்கை பார்த்தவர்கள்; அப்போது ராஜபக்ஷ அரசுக்கு இராணுவ ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் உதவ முற்பட்டவர்கள்; கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்து கொண்டிருக்கும் சிங்களக் குடியேற்றத்தைப் பார்த்தும் பார்க்காமல் இருந்தவர்கள் கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றுதான். சீனாவுடனான இலங்கையின் நட்புறவு அதிகரித்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகிவிடும் என்று அச்சப்படுவோர், இனப்படுகொலை நடக்கும்போது யோசித்திருக்க வேண்டும் அதை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள்... இலங்கையில் நடந்த இனப் படுகொலையைப் பற்றிப் பேசாமல், 13 ஆவது சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வற்புறுத்தாமல், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் ஏதோ தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுபோல ஒரு நாடகத்தை அரங்கேற்றி, பிரதமர் மன்மோகன்  சிங்  ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் மன்னிப்புக் கேட்காத குறையாக, தான் மாநாட்டில் கலந்து கொள்ள இயலாததற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். மாநாட்டில் இந்தியா கலந்து கொள்கிறது, ஆனால், பிரதமர் கலந்து கொள்ளவில்லை. புரிகிறதா சூட்சுமம் ?    ராஜபக்ஷவின் இராஜதந்திரம் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது!

Saturday, November 9, 2013

 

நாம் தமிழர்கள் என்பதால்தான் ஒடுக்கப்படுகிறோம். இங்குள்ள சிங்கள அரசியல்வாதிகளிடம் போனால், நீங்கள் தமிழர்களுக்குத்தானே வாக்களித்தீர்கள், அவர்களிடமே போய் கேளுங்கள் -----

எட்டு வருடங்களாக காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். பட்டப்பகலில் நடந்து செல்வதற்குக் கூட பயமாக இருக்கிறது. எந்தக் குற்றமும் செய்யாமல் திறந்த வெளியில் சிறைபடுத்தப்பட்டது போலத்தான் எங்களது வாழ்க்கை" - இது களுத்துறை மாவட்டத்தில் அரம்பஹேனவில் வசிக்கும் மக்களின் சோகக்குரல்.ஹொரணை பெருந்தோட்டக் கம்பனியின் ஹில்ஸ்ட்றீம் தோட்டத்தின் ஒரு பிரிவே அரம்பஹேன. அங்குள்ள மக்கள் காட்டுக்குள் வாழ்வதாகவும் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பெரும்பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் கேசரிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தனர்.ஆம்! புளத்சிங்ஹல நகரிலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தூரத்தில் கரடுமுரடான பாதையில் அரம்பஹேனவுக்கு பயணித்தோம். சுமார் 10 கிலோமீற்றர் பயணத்தின் பின்னர் இருபுறமும் அடர்ந்த காடுகள் நிறைந்திருக்க வேறெங்கோ தேசத்துக்கு வந்துவிட்டதுபோன்ற உணர்வு.
 
ஆங்காங்கே காணப்படும் இறப்பர் மரங்களுக்கு நடுவே மனிதர்கள் உள்ளே போக முடியாதளவுக்கு உயர்வான காட்டு மரங்களும், செடிகொடிகளும் நிறைந்திருக்கின்றன.அடர்ந்த காடுகளுடன் கூடிய சிறு மலைக்குன்றுகளுக்கிடையே அமைந்திருக்கிறது லயன் குடியிருப்பு. அங்கு 14 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் வசித்து வருகிறார்கள்.இந்தத் தோட்டம் மூடப்பட்டு 8 வருடங்கள் ஆகின்றன. அன்று முதல் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் தரப்படவில்லை. மேலும் இதர வசதிகள் எதுவும் செய்துகொடுக்கப்படவில்லை.இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கூலித் தொழில் செய்து வருகின்றனர்.வளமான தோட்டமாக இருந்த அரம்பஹேன, நிர்வாகத்தின் கவனயீனம் காரணமாக காடாகிப் போனது. அந்தத் தோட்டம் 165 ஹெக்ரெயர் நிலப்பரப்பை கொண்டதாகவும் இறப்பர் மரங்கள் மீள்நடுகை செய்யப்படாத காரணத்தினால் தோட்டம் முழுவதும் காடாகிப் போனதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.

அரம்பஹேனவில் தனித்துவிடப்பட்டுள்ள இந்த மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் இல்லை, வைத்தியசாலை இல்லை, மலசலகூடங்கள் இல்லை, தண்ணீரைக் கூட காத தூரத்தில் உள்ள கிணற்றிலிருந்துதான் பெற்றுக்கொள்கிறார்கள்.யாருக்காவது சுகயீனம் என்றால்கூட நோயாளியை காட்டுவழியே தூக்கிக்கொண்டுதான் போக வேண்டும். மலைப்பாம்புகள் அதிகமாக நடமாடும் இந்தக் காட்டுப்பகுதியில் எங்கே கால் வைப்பது என்ற அச்சமே மரணத்தின் விளிம்புவரை எம்மைக் கொண்டு சென்றுவிடும்" என்கிறார் சங்கர் என்ற குடும்பஸ்தர்.பி.பால்ராஜ்(53) என்ற குடும்பஸ்தர் தமது பிரச்சினைகளை இவ்வாறு விபரிக்கிறார்.நாம் பரம்பரை பரம்பரையாக இங்கே வசிக்கிறோம். 1924 ஆண்டு இந்த தோட்டத்துக்கு எங்களுடைய குடும்பத்தார் வந்திருக்கிறார்கள். நல்ல இலாபத்துடன் தோட்டம் இயங்கிவந்தது.2005 ஆம் ஆண்டிலிந்ருதுதான் இந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். இறப்பர் மரங்களை பிடுங்கிவிட்டார்கள். கிட்டத்தட்ட 1600 மரங்கள் இருந்தன. இப்போது 500 மரங்கள் கூட இல்லை. மற்றைய இடங்களெல்லாம் காடாகிவிட்டது.தோட்ட முகாமையாளரிடம் பல தடவைகள் முறையிட்டோம். ஆனால் எமது அழுகுரலுக்கு யாருமே செவிசாய்க்கவில்லை. திடீரென வேலை நிறுத்திவிட்டார்கள். சம்பளம் தராததால் வருமானத்துக்கு வழியும் இல்லாமல் திண்டாடினோம். இறப்பர் மரத்தின் உச்சிவரை பால் வெட்டி தோட்டத்துக்குக் கொடுத்தோம். ஆனால் எந்தப் பிரதிபலனும் கிடைக்கவில்லை.
 
நாம் தமிழர்கள் என்பதால்தான் ஒடுக்கப்படுகிறோம். இங்குள்ள சிங்கள அரசியல்வாதிகளிடம் போனால், நீங்கள் தமிழர்களுக்குத்தானே வாக்களித்தீர்கள், அவர்களிடமே போய் கேளுங்கள் என்கிறார்கள்.நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம். கடவுளும் எம்மை கைவிட்டுவிட்டதாகத்தான் தோன்றுகிறது"என்றார்.எஸ்.சரோஜினி(66)கூறுகையில்,நாங்கள் இந்தத் தோட்டத்துக்கு சேவையாற்றியிருக்கிறோம். வியர்வை சிந்தி உழைத்த இடமெல்லாம் இப்போது காடாகிப்போய்விட்டது. காட்டு வழியாகத்தான் எங்களுடைய லயனுக்கு வரவேண்டும் என்பதால் யாரும் இங்கே வரமாட்டார்கள். வேலை இல்லாததால் கால்வயிறு,அரைவயிறு என்றுதான் வாழ்ந்துவருகிறோம். ஒவ்வொரு நாளும் நித்திரையின்றித் தவிக்கிறோம்" என்றார்.அரம்பஹேனயிலுள்ள சிறுவர்கள் அருகிலுள்ள குடகங்கை என்ற தோட்டத்திலுள்ள பாடசாலைக்குச் செல்கிறார்கள். அந்தப் பாடசாலை தரம் 9 வரை மாத்திமே கொண்டு இயங்குகிறது.அதற்கு மேல் கல்வி கற்பதற்கு மத்துகமை நகருக்கு மாணவர்கள் செல்ல வேண்டும். அவ்வாறெனின் பல கிலோமீற்றர் தூரம் காட்டுவழியே நடந்து சென்றுதான் பஸ்ஸில் பயணிக்க வேண்டும்.அவ்வாறு பாடசாலைக்கு செல்வோர் வீடு திரும்பும் வரை நிம்மதியின்றிக் காத்திருப்பதாக பெற்றோர் கூறுகின்றனர். நீண்டதூரம் நடக்க வேண்டியதால் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியோரும் உள்ளனர்.
 
தோட்ட மக்கள் பகலில் நடமாடுவதற்கும் அச்சம் கொண்டிருக்கிறார்கள். குடியிருப்பைச் சூழ சிறுகுன்றுகளில் காட்டுப் பன்றிகளும் மலைப்பாம்புகளும் விஷப்பூச்சிகளும் இருப்பதாகவும் இரவில் நடமாட முடியாத நிலை உள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.தோட்டத்தில் உள்ளவர்களுக்கு யாராவது கடிதம் அனுப்பினால் கூட அது உரியவர்களை சென்றடைவதில்லை. தபால்காரரே இல்லாத தோட்டத்தில் எப்படி கடிதம் கிடைக்கும் எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.அரம்பஹேன தோட்டம் மூடப்படுவதற்கு முன்னர் இறப்பர் மரங்கள் குத்தகை அடிப்படையில் மக்களுக்கு வழங்கப்பட்டன. எனினும் தோட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டு பெரும்பான்மையினத்தவருக்கே வழங்கப்பட்டதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.தோட்டக் குடியிருப்பிலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் பால் சேகரிக்கும் நிலையம் இருக்கிறது. உள்ளே போகமுடியாத அளவுக்கு காடுகள் வளர்ந்து உடைந்து சேதமடைந்து பாழடைந்திருக்கிருக்கிறது அந்த நிலையம். அரம்பஹேன தோட்ட மக்கள் தாம் எதிர்கொண்டுள்ள அபாயம் மற்றும் சிரமங்கள் குறித்து தமிழ் அரசியல்வாதிகள் பலரிடமும் முறையிட்டிருக்கிறார்கள். இதுவரை விமோசனம் கிடைக்கவில்லை.அரம்பஹேன தோட்டத்திலுள்ள தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத காரணத்தினால் அவர்களுக்குரிய கொடுப்பனவுகள் எதனையும் வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவிப்பதாக பாதிக்கப்பட்டோர் கூறுகிறார்கள்.

தோட்ட நிர்வாகத்தின் அசமந்தப் போக்கினால் முழுத் தொழிலாளர்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குரல் வெளியுலகுக்கு கேட்காவண்ணம் திட்டமிட்ட வகையில் இச்செயற்பாடு இடம்பெற்றுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.ஏனென்றால் தோட்டத்தில் தொழில் வழங்கப்படாத தருணத்தில் நிர்வாகம், வேறு தோட்டங்களில் இவர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும். அல்லது ஏதாவது மாற்றீடான திட்டங்களை அமுல்படுத்தியிருக்கலாம். ஆனபோதும் தொழிலாளர்கள் குறித்த எந்த அக்கறையும் இங்கு வெளிக்காட்டப்படாமை கவலையளிக்கிறது.பெரும்பான்மையினத்தோர் அதிகமாக வசிக்கும் பகுதிக்கு மத்தியில் இத்தோட்டம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்தத் தோட்டத்தையும் பெரும்பான்மையினருக்கு விற்கும் முயற்சி இடம்பெற்று வருவதாகவும் ஒருபுறம் குற்றம் சுமத்தப்படுகிறது.தாங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய கலை,கலாசார,விழுமியங்களையும் பாதுகாக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.தோட்டம் மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் தொழில் வழங்கப்பட வேண்டும் அல்லது வேறு இடத்தில் தமக்கு காணிகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.அரசியல்வாதிகள் பலர் தேர்தல் காலங்களில் மாத்திரம் வந்து போயிருக்கிறார்கள். இந்த மக்களின் குறைகளை தீர்ப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
ஆக,தோட்டம் முழுவதும் காடாக மாறியமைக்கு யார் பொறுப்பு? ஒவ்வொரு நிமிடத்தையும் அச்சத்துடன் கழித்துக்கொண்டிருக்கும் மக்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் யார்? பெரும்பான்மை இனத்தோர் வாழ்கின்ற தோட்டங்கள் சரியாக நிர்வகிக்கப்படுகின்ற போது, இந்தத் தோட்டம் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நோக்கப்பட்டது ஏன்? போன்ற கேள்விகள் இயல்பாய் எழுகின்றன.உண்மையில் வெளியுலகத் தொடர்புகள் இல்லாமல் காட்டுக்கு நடுவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த மக்களுக்கு தோட்ட நிர்வாகம் உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.அதேபோன்று பருவத்தில் பூக்கும் காளான்கள் போல தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களிடம் சென்று வாக்கு கேட்டுக் கெஞ்சும் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் இனிமேலும் மௌனம் சாதிக்கக் கூடாது.ஒரு சமூகம் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் ஒதுக்கப்பட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உலகம் நொடிக்கு நொடி மாற்றம் கண்டுகொண்டிருக்க இங்கே ஒரு சமூகம் அடுத்த நிமிடத்தை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கிறது. ஆதலால் உரிய தரப்பினர் இணைந்து தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

உலக மேடையில் தனது பிம்பத்தை பெருப்பித்துக் காட்டுவதற்காக,  ஒரு பிரமாண்டமான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது...இலங்கை அரசாங்கம், உலக மேடையில் தனது பிம்பத்தை பெருப்பித்துக் காட்டுவதற்காக, நவம்பர் 15-17 நடக்கவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டுக்காக ஒரு பிரமாண்டமான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது. மாநாட்டுக்கான மொத்தச் செலவு பற்றி கேட்டபோது, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது: நாங்கள் மாநாட்டுக்கு என்ன செலவு செய்கின்றோம் எனக் கேட்க வேண்டாம். இந்தச் செலவுகளை, அதிகளவான உள் வருகைக்கான முதலீடாக காண வேண்டும். பொதுநலவாய மாநாட்டின் பின்னர், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பொதுநலவாயத் தலைவராக இருப்பார். 52 முன்னாள் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கங்களின் தலைவர்கள், தமது பழைய எஜமானர்களுடன் பங்குபற்றும் இந்த மாநாடு, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக அமெரிக்காவும் அதன் பங்காளிகளும் திணிக்கும் அழுத்தங்களை குறைக்க உதவும் என்று அவர் கணக்கிடுகின்றார். இந்த மாநாடு வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கும் என்றும் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக தனது அரசாங்கத்தை பலப்படுத்தும் என்றும் அவர் எதிர்பார்க்கின்றார். ராஜபக்ஷ, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இராணுவத்தால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்ற விவகாரங்கள் முன்னணிக்கு வருவதைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்கின்றார். ஐ.நா. நிபுணர்கள் குழு ஒன்று, 2009 மே மாதம் யுத்தம் முடிவடையும் வரையான மாதங்களில் இராணுவத்தினால் குறைந்தபட்சம் 40,000 பேர், பிரதானமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது

அப்போதிருந்தே அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கில் பிரமாண்டமான இராணுவ ஆக்கிரமிப்பை முன்னெடுத்து வருவதோடு, அதன் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு பூராவும் உள்ள உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்காக பொலிஸ் அரச வழிமுறைகளை பயன்படுத்துகின்றது. பிரித்தானியா, கனடா, ஆவுஸ்திரேலியா மற்றும் இந்தியா உட்பட பொதுநலவாய நாடுகள், ராஜபக்ஷ வின் யுத்தத்தை முழுமையாக ஆதரித்தன. இந்த நாடுகள் புலிகளை தடை செய்ததோடு அதன் நிதிகளையும் தடுத்தன. ராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு இந்தியாவும் பிரித்தானியாவும் இராணுவ மற்றும் தளபாட உதவிகளை கொடுத்தன. இப்போது அவை விமர்சனங்களை எழுப்புவதோடு இந்த ஆண்டு முற்பகுதியில், இலங்கையில் மனித உரிமைக மீறல்கள் சம்பந்தமாக மட்டுப்படுத்தப்பட்ட விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்து அமெரிக்க அனுசரணையுடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்த ஆண்டு முற்பகுதியில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு வாக்களித்தனர். இந்த நாடுகளோ அல்லது அமெரிக்காவோ, இலங்கையில் தமிழர்கள் உட்பட மக்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக, அல்லது யுத்தத்தின் போது இராணுவம் மேற்கொண்ட அட்டூழியங்கள் சம்பந்தமாக அக்கறை காட்டவில்லை. மாறாக, சீனாவுடனான தனது உறவுகளை மட்டுப்படுத்துமாறு ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்த விவகாரத்தை சிடுமூஞ்சித்தனமாக சுரண்டிக்கொள்கின்றன. கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர், மனித உரிமைகள் பிரச்சினையை இலங்கை அணுகாத காரணத்தால் பொதுதநலவாய மாநாட்டில் தான் பங்குபற்றப் போவதில்லை என பாசாங்குத்தனமாக அறிவித்தார். அமெரிக்காவைப் போல், கனடாவும் ஆப்கானிஸ்தானில் நவகாலனித்துவ ஆக்கிரமிப்பின் பங்காளியாகவும், அங்கு நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகள் மனித உரிமை மீறல்களையும் யுத்தக் குற்றங்களையும் மேற்கொள்வதை வழமையாகக் கொண்டுள்ளன. ராஜபக்ஷவை நெருக்கும் வாஷிங்டனின் முயற்சிகளுடன் அணிசேர்ந்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புகள் முன்னிலைப்படுத்தும் இந்த பகிஷ்கரிப்பு பிரசாரத்தை தூக்கிப் பிடிப்பதற்காக ஹார்ப்பரின் நிராகரிப்பு பயன்படுத்தப்படுகின்றது. பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் கூட பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுக்கின்றன. அவர்கள் தமிழ் தட்டுக்களின் சிறப்புரிமைகளை தக்கவைத்துக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வுக்காக சர்வதேச ஆதரவை எதிர்பார்க்கின்றனர். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன், தான் பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவதோடு இலங்கை அரசாங்கத்திடம் மனித உரிமை பிரச்சினைகளை எழுப்புவதற்கான ஒரு சபையாக அதைப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

உண்மையில், கொழும்பிலும் தெற்காசியாவிலும் தனது அரசியல் செல்வாக்கை பெருகச் செய்யவும் வர்த்தக வாய்ப்புகளை பெருகச் செய்யவும் இந்த மாநாட்டைப் பயன்படுத்திக்கொள்ள பிரிட்டிஷ் எதிர்பார்க்கின்றது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டுக்கு வருகை தருவதை உறுதிப்படுத்துவதில் ஜனாதிபதி ராஜபக்ஷ ஏங்குகின்றார். அவர் வருகை தர மறுக்கின்றமை, புது டில்லுக்கும் கொழும்புக்கும் இடையில் ஏற்கனவே சிக்கலில் உள்ள உறவுகளை மோசமாக்கக் கூடும். நாட்டின் பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒரு அதிகாரப் பரவலாக்கல் உடன்படிக்கையை எட்டுமாறு சிங் இலங்கை அரசாங்கத்தை நெருக்கி வருகின்றார். இலங்கையில் தமிழர்கள் நடத்தப்படும் முறை தொடர்பாக பரந்த வெகுஜன எதிர்ப்பு காணப்படும் தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள், பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிக்குமாறு கோரும் நெருக்குவாரத்துக்கு  சிங் முகங்கொடுக்கின்றார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. கருணாநிதிக்கு அண்மையில் பதில் அழித்த சிங், பொதுநலவாய மாநாட்டில் எனது பங்குபற்றல் சம்பந்தமான விடயம், உங்கள் கட்சியினதும் மற்றும் தமிழ் மக்களதும் உணர்வுகள் உட்பட, அது சம்பந்தமான அனைத்து காரணிகளையும் கவனத்தில் எடுத்த பின்னரே தீர்மானிக்கப்படும் என அறிவித்தார். இந்திய ஸ்தாபனத்தின் தட்டுக்கள், மாநாட்டில் பங்குபற்றி இந்தியாவின் நலன்களை வலியுறுத்துவதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்துமாறு சிங்குக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்தியா பங்குபற்றுவதானது தீவின் மக்கள் சம்பந்தமாக மட்டுமன்றி, அதன் தமிழ் சிறுபான்மை சமுதாயம் சம்பந்தமாகவும் இந்தியாவின் அர்ப்பணிப்பை பிரதிபலித்து, ஒரு பிராந்திய சக்தியாக இந்தியாவின் நிலையை பலப்படுத்தும் என வெளிவிவகார அமைச்சின் அலுவலர் ஒருவர் தெரிவித்திருந்ததாக டைம்ஸ் ஒஃப் இந்தியா மேற்கோள் காட்சியிருந்தது. அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்டும் பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுகின்றார். தொழிற் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியுமாக ஆட்சியில் இருந்த ஆவுஸ்திரேலிய அரசாங்கங்கள், தீவில் இருந்து அகதிகள் வெளியேறுவதை தடுக்கவும் மற்றும் அவர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவதற்கான தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்துவதை தடுக்கவும் இலங்கை அரசாங்கத்துடனும் அதன் பாதுகாப்புப் படைகளுடனும் நெருக்கமான உறவுகளை அமைத்துக்கொண்டுள்ளன. தற்போதைய கூட்டணி அரசாங்கம், சீனாவுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டுள்ள ஆசியாவில் ஒபாமா நிர்வாகத்தின் இராணுவக் கட்டியெழுப்பல்களுக்கு முழுமையாக ஆதரவளிக்கின்றது. முந்தைய தொழிற் கட்சி அரசாங்கத்தின் கீழ், அமெரிக்க இராணுவம் அவுஸ்திரேலியத் தளங்களில் பெரும் வசதிகளைப் பெற்றுள்ளது. அபோட், சீனாவிடம் இருந்து இலங்கையை தூர விலகச் செய்ய ராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுப்பதன் பேரில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை.

ராஜபக்ஷ அரசாங்கம், இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏங்குவதோடு, நாட்டின் வரிச் சலுகைகள், மலிவு உழைப்பு மற்றும் கட்டிட நிர்மாணத்துறைக்கான ஒரு காட்சியகமாக பொதுநலவாய மாநாட்டில் ஒரு தொகை வர்த்தக சந்திப்புகளையும் திட்டமிட்டுள்ளது.  அரசாங்கம் 2013ல் 2 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை எதிர்பார்த்து திட்டமிட்டிருந்தாலும், ஆண்டின் முதல் அரைப் பகுதியில் 537 மில்லியன் டாலர்கள் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் உள்ள பல்வேறு பொதுநலவாய நாடுகளின் கோடிக்கணக்கான வறிய மக்களின் தலைவிதி தொடர்பாக மாநாட்டில் வாய்மூல வாக்குறுதிகள் கொடுக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. எவ்வாறெனினும், பிரிட்டனிடம் இருந்து உத்தியோகபூர்வமாக சுதந்திரம் பெற்றதில் இருந்தே, இந்த நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கங்கள் வறுமை என்ற காலனித்துவ வழிப்பெற்ற பேறில் இருந்து வெளிவருவதில் முற்றிலும் இலாயக்கற்றவை என்பதையும் அவற்றின் ஜனநாயகவிரோத ஆட்சியையும் நிரூபித்துள்ளன. ராஜபக்ஷ, தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் வாழ்க்கைத் தரத்தை அவரது அரசாங்கம் ஆழமாக சீரழிப்பதற்கு எதிராக வளர்ச்சியடைந்து வரும் சீற்றத்தையும் எதிர்ப்பையும் திசை திருப்புவதற்கான இன்னொரு அரசியல் திசைதிருப்பலாக இந்த மாநாட்டை பயன்படுத்திக்கொள்ள எதிர்பார்க்கின்றார். ஜனாதிபதி, தொலைக் காட்சியில் தோன்றி பெருமை பேசுவதற்காக சில பிரசித்திபெற்ற நட்சத்திர நடிகர்களை பட்டியலிட்டுள்ளார். நாட்டின் அரச தலைவர் பொதுநலவாய நாடுகளின் தலைவராக பொறுப்பேற்கும் நாள் எங்களுக்கு எந்தளவுக்கு பெருமைக்குரியது! என அவர்கள் தெரிவிக்கின்றனர். அடிக்கடி ஏகாதிபத்தியவிரோத தோரணையைக் காட்டு ராஜபக்ஷவுக்கு, பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் மிச்சசொச்சத்துக்கு தலைமைத்துவத்தை பெறுவதில் ஐயமும் கிடையாது என்பது தெளிவானது.